செய்திகள்

கரூர் அருகே முறைகேடாக பெட்ரோல் - டீசல் விற்பனை செய்தவர் கைது

Published On 2019-01-21 16:33 GMT   |   Update On 2019-01-21 16:33 GMT
கரூர் அருகே முறைகேடாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:

கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தவளப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஒரு நபர் கேன்களில் டீசல் கொண்டு செல்வதை பார்த்த அவர், அவரிடம் எங்கு டீசல் வாங்கி செல்கிறீர்கள் என்று விசாரித்தபோது  அருகில் உள்ள பள்ளிப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள தோட்டத்தில் ஒருவரிடமிருந்து டீசல் பெற்றுச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த நபரை அழைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு  வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி விரைந்தார். அப்போது  அங்கு ஒரு தென்னந்தோப்பிற்குள் முறைகேடாக டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை புஞ்சை தோட்டக்குறிச்சியை சேர்ந்த கொடிஅரசு (47) என்பவர் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து உரிய அனுமதி இல்லாமல் சட்டத் திற்கு புறம்பான வகையில் முறைகேடாக பெட்ரோல் டீசல் விற்றுவருவது தொடர்பாக  போலீஸ் அதிகாரிகளுக்கும், குடிமைப் பொருள் வழங்கும் தரக்கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தார்.

இதையடுத்து வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,  குடிமைப்பணி பொருள் வழங்கும் தரக்கட்டுப்பாட்டு பிரிவின் சார்பு ஆய்வாளர் சையது அலி ஆகியோர்  சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கொடி அரசை கைது செய்து, அங்கிருந்த 120 லிட்டர் டீசல் மற்றும் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் கேன்களை பறிமுதல்  செய்தனர்.
Tags:    

Similar News