செய்திகள்

ராமநாதபுரத்தில் வேனை வழிமறித்து வழிப்பறி - 3 பேர் கைது மேலும் சிலருக்கு வலைவீச்சு

Published On 2019-01-10 14:27 GMT   |   Update On 2019-01-10 14:27 GMT
வேனை வழிமறித்து டிரைவரிடம் செல்போன்கள் மற்றும் பணத்தை மர்ம கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்:

ராமேசுவரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 37). இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரிடம் அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் திருச்சியில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் எனக்கூறினர்.

இதனைத்தொடர்ந்து 4 பெண்கள், 2 ஆண்களை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு வேன் புறப்பட்டது. ராமச்சந்திரனே வேனை ஓட்டிச் சென்றார்.

ராமநாதபுரம் நதிப்பாலம் அருகே வேன் சென்றபோது 6 பேர் வந்தனர். அவர்கள் திடீரென வேனை நோக்கி கற்களை வீசினர்.

இதில் வேனின் கண்ணாடிகள் உடைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் வேனை உடனே நிறுத்தினார். வேனில் இருந்தவர்களும் பயத்தில் அலறினர்.

வேன் நின்றதும் 6 பேர் கும்பல் சுற்றி வளைத்தது. அவர்கள் டிரைவர் ராமச்சந்திரனை தாக்கினர். அவரிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இந்த துணிகர வழிப்பறி சம்பவம் குறித்து உச்சிப்புளி போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியதில், குமராண்டி வலசையைச் சேர்ந்த கண்ணன் (எ) கருப்பட்டி, கவியரசன், உடைச்சியார் வலசை மோடி என்ற முகேஷ் பாண்டி, ஏந்தலைச் சேர்ந்த அகிலன் என்ற தர்மா (20) சாத்தான்குளம் அருண் பிரசாத் (22), கோபிநாத் (20) ஆகியோர் தான் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டனர் என தெரியவந்தது.

அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதில் அகிலன் என்ற தர்மா, அருண்பிரசாத், கோபிநாத் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நதிப்பாலம் பகுதியில் இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால் அந்தப்பகுதி வழியாக செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர்.

குடிபோதையில் வரும் வழிப்பறி திருடர்கள், தாக்குதலில் பலரும் காயமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையை தவிர்க்க அந்தப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வழிப்பறி திருடர்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News