செய்திகள்

கோவை அருகே சித்த வைத்தியரை யானை மிதித்து கொன்றது

Published On 2019-01-02 07:14 GMT   |   Update On 2019-01-02 07:14 GMT
கோவை அருகே சித்த வைத்தியரை யானை மிதித்து கொன்றது.இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

வடவள்ளி:

கோவை ஆலாந்துறை அருகே உள்ள முள்ளங்காடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் கிட்டி (75). சித்த வைத்தியர். நேற்று இவர் மூலிகை பறிக்க வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றார்.

ஆனால் இரவு நேரமாகியும் கிட்டி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடி வெள்ளியங்கிரி மலை பகுதிக்கு சென்றனர்.

இன்று காலை முள்ளங்காடு ஊர் தலைவர் ரமேஷ் அத்தி மரக்குட்டை ஜல்லி மேடு பகுதியில் கிட்டியை தேடி சென்றார். அப்போது அங்கு கிட்டி பிணமாக கிடந்தார். அவரது குடல் வெளியே தள்ளியபடி இருந்தது.

கிட்டியை யானை மிதித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து போளூவாம் பட்டி வனத்துறையினருக்கும் ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வருவாய் ஆய்வாளர் குபேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினார்கள்.

யானை தாக்கி பலியான கிட்டியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இப்பகுதியில் கடந்த 4 வருடத்தில் 7 பேர் யானை தாக்கி இறந்து உள்ளனர். இதனால் ஆதிவாசி மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

Similar News