செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்

Published On 2018-12-24 16:16 GMT   |   Update On 2018-12-24 16:16 GMT
தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி:

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், சோகத்தூர் அடுத்துள்ள அருந்ததியர் காலனி அருகே ஆட்டக்காரன்பட்டியை சேர்ந்த அருந்ததியின மக்கள் மற்றும் ஆதிதமிழர் பேரவை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு கடந்த 25 வருடங்களுக்கு முன்பே அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அப்படி ஒதுக்கப்பட்ட நிலத்தின் பட்டாவும் தரவில்லை, இலவச வீடும் கட்டி கொடுக்கவில்லை. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்துகிறோம். எனவே கலெக்டர் எங்கள் மனுவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல அனுமதிக்காததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளே நுழைந்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News