செய்திகள்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திருவண்ணாமலை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை

Published On 2018-12-04 12:12 GMT   |   Update On 2018-12-04 12:12 GMT
திருவண்ணாமலை அருகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள காப்பகத்தில் தங்கியுள்ள 15 வயது சிறுமி, அதே கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் சவுந்தர்ராஜன் (38) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் மாணவியை பள்ளியிலேயே கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர், இந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது. அதையும் மீறி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மற்றும் ஆங்கில பாடத்துக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவதாக ஆசிரியர் சவுந்தர்ராஜன் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த ஆசிரியர் சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை மற்றும் மருத்துவ ஆய்வறிக்கை மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சவுந்தர்ராஜனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.

மேலும் அவர், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News