செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது வழக்கு

Published On 2018-12-01 10:03 GMT   |   Update On 2018-12-01 10:03 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #sterliteplant #naamtamilarkatchi

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இதனிடையே ஸ்டெர்லைட் மூடப்பட்டதை எதிர்த்து ஆலை நிர்வாகத்தில் இருந்து பசுமை தீர்ப்பாயத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடியில் ஆய்வு நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம் என பசுமை தீர்ப்பாயம் கூறியது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளரும், மக்கள் நீதி கொற்றம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வியனரசு அளித்த பேட்டியில், “ஸ்டெர்லைட் ஆலையை பொதுமக்களை திரட்டி அடித்து நொறுக்கி தமிழகத்தை விட்டு ஓட ஒட விரட்டுவோம்“ என்று பேசினாராம். இந்த வீடியோ சமூக வலதளங்களிலும் பரவியது.

இந்த நிலையில் மக்களிடையே போராட்டத்தை தூண்டும் விதமாக பேசியதாக கூறி வியனரசு மீது ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் அதிகாரி சுமித் பர்மன் சிப்காட் போலீல் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. #sterliteplant #naamtamilarkatchi

Tags:    

Similar News