செய்திகள்

கஜா புயல் பாதிப்பு: அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல - கமல்

Published On 2018-11-30 22:13 GMT   |   Update On 2018-11-30 22:13 GMT
கஜா புயலால் பாதித்த மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல என்று மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHassan #GajaCyclone #TNGovernment
சென்னை:

மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட  நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு "நல்ல சோறு"  போட்டவர்கள் இன்று அரசு வழங்கும்   "புழுத்துப்போன அரிசியை" சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது   மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும்.

அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும்.  நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் "கிராம நிர்வாக அதிகாரிகள்" கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும்  அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது.



வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன  செய்வார்கள்  என்பது  கேள்விக்கு  உரியதாக  இருக்கின்றது.

இது  தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம்.

இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8  வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.#KamalHassan #GajaCyclone #TNGovernment
Tags:    

Similar News