செய்திகள்

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து- உயர்நீதிமன்றம்

Published On 2018-11-30 08:43 GMT   |   Update On 2018-11-30 08:43 GMT
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
சென்னை:

தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. அந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
 
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தனர்.

இதற்கிடையே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்து அவர் இன்று பணி ஓய்வுபெறுகிறார்.


இந்நிலையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு  மீது இன்று  நீதிபதிகள் மகாதேவன், ஆதீகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது.

சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும்  இன்றுடன் ஓய்வு பெறும் பொன் மாணிக்கவேலுவின் பதவிக்காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டித்து அவரை சிலை கடத்தல் வழக்கு விசாரணையின் சிறப்பு அதிகாரியாக நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
Tags:    

Similar News