செய்திகள்

கோத்தகிரியில் கடும் குளிர் பொதுமக்கள் அவதி

Published On 2018-11-29 16:36 GMT   |   Update On 2018-11-29 16:36 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். இம்முறை தென்மேற்கு பருவமழை எதிர் பார்த்த அளவிற்கு பெய்தது.

ஆனால் வடகிழக்கு பருவமழை குறித்த சமயத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கவில்லை, மாறாக தற்போது மழை இன்றி வெயில் கடுமையாக அடிக்கிறது. கோத்தகிரியில் வழக்கத்திற்கு மாறாக பகலில் வெயில் சுட்டெரிக்கிறது.

இதற்கு நேர் மாறாக இரவு நேரங்களில் உறைப்பனி கொட்டுகிறது. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படுகிறது.

இந்த காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு சளி, தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேபோல் இரவில் உறைப்பனி கொட்டுவதால் பச்சை தேயிலை மற்றும் மலைக் காய்கறி பயிர்கள் கருக ஆரம்பிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கஜா புயல் தாக்கம் கோத்தகிரியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாக்கம் இல்லாமல் சாரல் மழை மட்டும் தான் பெய்தது. இதனால் உறைப்பனி அதிகமாகி உள்ளது. தொடர்ந்து மழையின்றி இதே நிலை நீடித்தால் கோடைக்கு முன்னரே தேயிலை செடிகள் முற்றிலும் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News