search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் குளிர்"

    • இன்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
    • நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, அரவேணு, அருவங்காடு, பர்லியார், காந்தல், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மாலை நேரத்தில் பெய்த மழை காரணமாக வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

    தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் வேறு வழியின்றி, மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு சென்றனர்.

    இன்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. காலையிலேயே மழை பெய்ய தொடங்கியதால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பிளாஸ்டிக் கவரினை அணிந்தபடி தேயிலை பறிப்பில் ஈடுபட்டனர். மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் பெரும்பாலானவா்கள் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்தவாறு வெளியில் நடமாடினர். வேன் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடியே வாகனத்தை இயக்கி சென்றனர்.

    கோத்தகிரியில் 9 மி.மீட்டர் மழையும், கொடநாட்டில் 2 மி.மீ, கீழ்கோத்தகிரியில் 69 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஊட்டி அருகே சோலூர், காத்தாடிமட்டம், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்றும் வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு வெயில் சற்று குறைந்து இதமான காலநிலை நிலவியது.

    இன்று காலை முதல் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. காலை நேரத்தில் பெய்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது.

    வால்பாறையில் நேற்று இரவு நேரத்தில் வால்பாறை, அக்காமலை, பச்சமலை, நடுமலை, கருமலை, கவர்கள், சோலையார் அணை, முடீஷ் போன்ற எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தோட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி சின்கோனாவில் 31 மில்லி மீட்டர் மழையும்,சின்னக்கல்லார் 16 மில்லிமீட்டர் மழையும், வால்பாறையில் 19 மில்லி மீட்டர் மழையும், சோலையார் அணை பகுதியில் 18 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

    மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவு முதல் மழை பெய்தது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர். குடைபிடித்தபடி அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.
    • குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் வயல் வெளியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது.

    இதனால் சேலம் மற்றும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு செல்கின்றனர். இந்த குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • குழந்தைகளுக்கு நவம்பர், டிசம்பர் மாதத்தில் சுவாச தொற்று பாதிப்பு வழக்கமாக ஏற்படும்.
    • சளி, இருமல், தொண்டை வலியுடன் மூச்சு விடவும் சிரமம் ஏற்படும்.

    சென்னை:

    குளிர் காலத்தில் பொதுவாக குழந்தைகள், பெரியவர்கள் சளி, இருமல் தொந்தரவால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். பருவமழை காலம் முடிந்தவுடன் குளிர், பனி தற்போது அதிகமாக உள்ளது.

    இதனால் குழந்தைகள், சிறுவர்கள் சுவாச தொற்று கிருமியால் பாதிக்கப்படுகிறார்கள்.

    சென்னையில் வழக்கத்தை விட இந்த ஆண்டு சுவாச பாதை தொற்று அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.

    சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு இருமல், தும்மல் வரும்போது, எளிதாக பரவி விடுகிறது.

    எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் தனியார் கிளினிக்குகளில் சளி, இருமல் பாதிப்புடன் குழந்தைகள் அதிகம் வருவதாக தெரிவிக்கின்றனர்.

    வழக்கத்தை விட அதிகமாக குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதால் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் எழிலரசி கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு நவம்பர், டிசம்பர் மாதத்தில் சுவாச தொற்று பாதிப்பு வழக்கமாக ஏற்படும். சளி, இருமல், தொண்டை வலியுடன் மூச்சு விடவும் சிரமம் ஏற்படும். லேசான காய்ச்சல் பாதிப்பு போன்ற அறிகுறிகளுடன் இந்த தொற்று பாதிப்பை ஏற்படுத்தும்.

    குழந்தைகள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இந்த வருடம் சற்று கூடுதலாக வருகிறார்கள். இது ஒரு வைரஸ் கிருமிதான். இதனால் பயப்பட தேவையில்லை. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் சுவாச தொற்று கிருமி குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாதமும் கூடுதலாகி வருகிறது.

    மருத்துவமனைக்கு சராசரியாக தினமும் 1200 குழந்தைகள் வருகிறார்கள். தற்போது சற்று கூடியுள்ளது. சுவாச தொற்று பாதிப்பு ஒரு வாரத்தில் குணமாகி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் டாக்டர் செந்தில்பிரபு கூறியதாவது:-

    பனி, குளிர் காலத்தில் சுவாச பாதை தொற்று கிருமி குழந்தைகளை தாக்கும். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, இருமலுடன் மூச்சு திணறலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும். சிலருக்கு வீசிங் வரும். அத்தகைய பாதிப்பு உள்ள குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் வழக்கமான அளவில்தான் பாதிப்பு உள்ளது.

    4 நாட்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்து சரியாகும். ஆனாலும் சளி, இருமல் 2 வாரம் வரை கடுமையாக இருக்கும்.

    இந்த பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது நல்லது. புளு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க பள்ளி செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது. குளிர் காலத்தில் பரவக் கூடிய இந்த வைரசால் உயிருக்கு ஆபத்து இல்லை. சிறுவர்களை மட்டுமின்றி முதியவர்களையும் இந்த வைரஸ் தாக்கக் கூடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிக குளிர் மற்றும் பனி காரணமாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஏற்காட்டில் ஸ்வெட்டர், மப்ளர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • பொதுமக்களும், பயணிகளும் ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆடைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    சேலம்:

    சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்ற ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரியவகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, பரந்த ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த ஒருவார காலமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தினமும் காலை 11 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர். பனி மூட்டம் காரணமாக காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் மெல்ல ஓட்டிச் செல்கின்றனர்.

    பகலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும், சாலையோரக் கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் மக்கள் கூட்டமின்றி உள்ளது. வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் நிலவும் பனிப்பொழிவு மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதிக குளிர் மற்றும் பனி காரணமாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஏற்காட்டில் ஸ்வெட்டர், மப்ளர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும், பயணிகளும் ஸ்வெட்டர் உள்ளிட்ட ஆடைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
    • ரெயில்கள் புறப்படும் நேரம் தொடர்பாக சரியான அறிவிப்பு வெளியிடப்படாததால் பயணிகள் ரெயில் நிலையத்தில் காத்து கிடக்கின்றனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.

    இதன் காரணமாக டெல்லி செல்லும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக செல்கின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட பல ரெயில்கள் 1 முதல் 8 மணி நேரம் வரை தாமதமாக வரும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    ரெயில்கள் புறப்படும் நேரம் தொடர்பாக சரியான அறிவிப்பு வெளியிடப்படாததால் பயணிகள் ரெயில் நிலையத்தில் காத்து கிடக்கின்றனர்.

    • காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது.
    • விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் சீதோசன நிலை மாற்றத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.  அதன்படி கடலூர் நகர், புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த கடும் குளிரால் சாலைகளில் தெருக்களில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளை புகை மண்டலமாக பணி அடர்ந்து காணப்படுகிறது.

    இந்த பனியினால் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும்போது முன்னால் செல்லும். வாகனங்கள் தெரியாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்கின்றனர்.

    குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை பணியினால் உண்டா கும் கடும் குளிரை தாங்க முடியாமல் அவதி ப்படுகின்றனர். மேலும் இதனால் பல்வேறு நோய்களும் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதுகிறது. பிற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டம் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் கடும் பணி பெய்தாலும் அளவுக்கு அதிகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீதோசன நிலை மாற்றத்தின் போது ஏற்படும் ஒவ்வொரு இடர்பாடுகளிலும் அளவுக்கு அதிகமாக பாதிக்கின்றனர்.

    • கடந்த 4 நாட்களாக ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவு அதிகமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக உறைபனி தாக்கம் தொடங்கும். குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி பொழிவு ஏற்படும். ஆனால், கடந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாக கடந்த நவம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கியது.

    இதற்கிடையே ஊட்டியில் மீண்டும் மழை பெய்ததால், பனிப்பொழிவு குறைந்தது. மீண்டும் கடந்த 2 வாரத்திற்கு முன்பு உறைபனி தாக்கம் காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை முதல் மாலை வரை நன்றாக வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை கடுங்குளிரும் நிலவி வருகிறது.

    ஊட்டியில் நேற்று காலையில் அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் உறைபனி படர்ந்து இருந்தது. ஊட்டி ரெயில் நிலையம், குதிரை பந்தய மைதானம், காந்தல் முக்கோணம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைபனி தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    அதிகாலையில் பச்சை புல்வெளிகளே தெரியாத வகையில் உறைபனி படர்ந்து இருந்தது. அவலாஞ்சி, தலைகுந்தா, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்சமாக பூஜ்யம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நேற்று பதிவானது. ஊட்டி நகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மீது பனி கொட்டி கிடந்தது. வாகன ஓட்டிகள் உறைபனியை அகற்றி விட்டு, வாகனங்களை இயக்கினர். ஊட்டியில் குறைந்தபட்சமாக 2.8 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

    ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடுங்குளிரை போக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். மேலும் தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகும் அபாயம் உள்ளது.

    • டெல்லியில் வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியசாக பதிவானது.
    • ஒடிசா மாநிலத்திலும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    புதுடெல்லி :

    மார்கழி மாதத்தில் பனி அதிகமாக இருப்பது வழக்கமானதுதான். ஆனால், வடமாநிலங்களில் இந்த ஆண்டு பனி வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.

    செயற்கைக்கோள் படங்களை பார்த்ததில், பஞ்சாப் மற்றும் அதைஒட்டிய வடமேற்கு ராஜஸ்தானில் இருந்து அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் வழியாக பீகார் மாநிலம் வரை பனிஅடுக்கு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனால், வடமாநிலங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. டெல்லியில், தொடர்ந்து 5-வது நாளாக நேற்று குளிர்காற்று வீசியது. அங்கு நிலவும் குறைந்தபட்ச வெப்பநிலை, இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற குளிருக்கு பெயர் பெற்ற மாநிலங்களின் வெப்பநிலையை விட குறைவாக உள்ளது. இதனால், டெல்லி மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள்.

    டெல்லியில், காலையில் பனிமூட்டமாக காணப்பட்டது. 25 மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால், சாலையில் சென்ற வாகனங்கள் திணறின. எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    உத்தரபிரதேசத்தில், சாலையில் எதையும் பார்க்க முடியாதநிலையில் கோர விபத்து ஏற்பட்டது. ஒரு பஸ், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து நேபாளத்துக்கு சென்று கொண்டிருந்தது.

    ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் உன்னா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் எதுவும் தெரியாததால், எதிரில் வந்த லாரியுடன் மோதியது. இதில் பஸ்சில் சென்று கொண்டிருந்த 4 பேர் பலியானார்கள்.

    டெல்லியில் நிலவிய பனிமூட்டம், ரெயில், விமான போக்குவரத்தையும் பாதித்தது. 267 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. அவற்றில், 82 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 140 பயணிகள் ரெயில்களும், 40 மின்சார ரெயில்களும் அடங்கும்.

    நேற்று முன்தினம் 88 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அதுபோல், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 30 விமானங்களின் போக்குவரத்து தாமதமானதாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 5 விமானங்கள், வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன.

    டெல்லியில் வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியசாக பதிவானது. கடுமையான பனிப்பொழிவால், டெல்லியில் பள்ளிகளுக்கான விடுமுறை 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலத்திலும் கடும் குளிர் நிலவி வருகிறது. வெப்பநிலை 3.7 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. காஷ்மீரில் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    வடமாநிலங்களில் கடும் குளிர் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், வாகனங்களில் விளக்கை போட்டுச் செல்லுமாறும் கூறியுள்ளது.

    ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினை இருப்பவர்கள், காலை வேளையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

    • டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 விமானங்கள் தாமதமாக சென்றன.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் குளிர் காலங்களில் வழக்கமாக அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இமாச்சல பிரதேசம், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. சாலைகளில் பனிமூட்டம் காரணமாக சில விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை முடிந்து 9-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் தற்போது குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு வரும் 15-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

    டெல்லியில் வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச அளவில் பதிவாகி உள்ள நிலையில், டெல்லி அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 விமானங்கள் தாமதமாக சென்றன.

    • ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • அடுத்த 4 நாட்களுக்கு மூடுபனி, கடும் குளிர் நிலை தொடரும்.

    வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தலைநகர் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, 14 ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.

    அடுத்த நான்கு நாட்களுக்கு இமாச்சலப் பிரதேசம், டெல்லி, பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் வடக்கு ராஜஸ்தானிலும் இரவு மற்றும் காலை நேரங்களில் அடர்ந்த மூடுபனி காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என்றும் அதன் பின் நிலைமை படிப்படியாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மூடுபனி மற்றும் கடும் குளிரை கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் பாட்னாவில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் டிசம்பர் 31 வரை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • உத்தர பிரதேசத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என அறிவிப்பு
    • பஞ்சாபில் பள்ளிகள் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு தொடங்கும் என தகவல்.

    வட இந்தியாவில் தற்போது கடும் குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் அடுத்த சில நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலையில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.

    அடர்ந்த மூடுபனியால் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த மாநிலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயங்காது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இதேபோல் பஞ்சாபின் பல பகுதிகளில் நிலவிய அடர்த்தியான மூடுபனியால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் அவதியடைந்தனர்.  இதைடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது.
    • காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிக கனமழை கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கீரப்பாளையம் குமராட்சி குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இன்று முதல் மீண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர் இதனை தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருப்பதால் கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருவதையும் காணமுடிந்தது மேலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை, சுட்டெரிக்கும் வெயில், தற்போது காலை நேரங்களில் பனிப்பொழிவு போன்றவற்றால் பொதுமக்கள் சீதோசன மாற்றம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காலை நேரங்களில் ஒருபுறம் வெயிலும் மற்றொரு புறம் குளிர்ந்து காற்றும் வீசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காலை நேரங்களில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும் காணமுடிந்தது. 

    ×