செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பொதுமக்கள்

Published On 2018-11-27 18:21 GMT   |   Update On 2018-11-27 18:21 GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு, பொதுமக்கள் நிவாரண பொருட்களை வழங்கினர்.
அன்னவாசல்:

கஜா புயலினால் தஞ்சை, நாகை, திருவாரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட கிராம நகர்புற பகுதிகளுக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் கரூர் குளத்துப்பாளையம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் சேரிக்கப்பட்ட 100 கிலோ அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, சீனி, சோப்பு, எண்ணெய், சேமியா, பிஸ்கட், பவுடர் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளை நிவாரணமாக உருவம்பட்டி கிராம மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

அதனை மகிழ்வோடு பெற்று கொண்ட கிராம மக்கள் இந்த நிவாரண பொருட்களை கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பத்துக்கும் வழங்க இயலாது என்பதால் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கினர். பள்ளி மாணவர்களுக்கு தினமும் பிஸ்கட் வழங்கும் படியும், சமையல் பொருட்களை வைத்து பள்ளி நாட்களில் சமைத்து வழங்கும் படியும் கேட்டுக்கொண்டனர்.

அதனை பெற்றுக்கொண்ட பள்ளி தலைமையாசிரியர் சாந்தி கூறியதாவது:-

கஜாபுயலினால் உருவம்பட்டி கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தங்களுக்கு வந்த நிவாரண பொருட் களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய செயலை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. வந்திருந்த பொருட்களில் சோப்பு, பிஸ்கட், ஷாம்பு, சீயக்காய், பற்பசை ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ள மளிகை பொருட்களை வைத்து மாணவர்களுக்கு சமைத்து வழங்கு முடிவெடுத்துள்ளோம் என்றார். பொதுமக்களும் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க எங்களை அழையுங்கள். நாங்கள் வந்து குழந்தைகளுக்கு சமைத்து தருகிறோம் என மகிழ்வோடு கூறி சென்றனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கருப்பையா மற்றும் கிராம நிர்வாகிகள் முத்தன், முருகேசன், பால்கண்ணு, பழனிவேலு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்.
Tags:    

Similar News