செய்திகள்

புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டிருக்க வேண்டும்- கேபி முனுசாமி

Published On 2018-11-27 10:26 GMT   |   Update On 2018-11-27 10:26 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்தார். #GajaCyclone #Modi #KPMunuswamy
காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை தூக்கி நிறுத்த ஜெயலலிதா வழிவந்த அரசின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து இரவு-பகல் பார்க்காமல் மழை வெயில் பார்க்காமல் பணிபுரிந்து வருகின்றனர். எதிர்க் கட்சியினர் இந்த நேரத்தில் அரசியல் செய்வதை விட்டு விட்டு மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களின் துயரைத் துடைக்க அரசுக்கு உதவ வேண்டும்.

அ.தி.மு.க. அரசின் அமைச்சர்கள் அதிகாரிகள் ஏன் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கூட புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லும்போது, அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்களது தேவையை எடுத்துக்காட்ட அழைத்து செல்கின்றனர். எதிர்க்கட்சியினர் இவற்றையெல்லாம் திசை திருப்பக் கூடாது.

அரசியல் செய்வதற்கு இது களம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் நமது மாநில மக்கள். இதை கருத்தில் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கிராமம் கிராமமாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை அளித்து வருகின்றது.

இந்த நேரத்தில் இல்லாவிட்டாலும் இந்த பணி முடிந்தவுடன் அந்த பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு நன்றி சொல்வார்கள். புயல் பாதித்த நேரத்தில் மழை பெய்திருந்தால் ஓரளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு இருக்காது. மரங்கள் விழுந்து இருக்காது. இயற்கை சீற்றத்தின் நிலையை யாராலும் கணிக்க முடியவில்லை.


தற்போது மறுசீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. திருவாரூர் இடைத்தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி தேதிக்குள் நடத்தலாம் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சோதனையான காலகட்டத்தில் எப்படி நடக்க வேண்டும் என மறைந்த தலைவர் ஜெயலலிதா வழிகாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் எந்த நிலையும் சமாளிக்கும் அளவிலே அ.தி.மு.க. உள்ளது. இதனிடையே புயல் நிவாரண பணிகள் தொய்வில்லாமல் நடத்திக்கொண்டே தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தால் ஜெயலலிதா வழிகாட்டுதலின் நடைபெறும் இந்த அரசு தேர்தலை முறையாக தைரியமாக எதிர்கொண்டு பணியாற்றி வெற்றி பெறும். தேர்தலை கண்டு அ.தி.மு.க. என்றும் அஞ்சியது கிடையாது.

தமிழக அளவில் மிக முக்கிய டெல்டா மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் கஜா புயலினால் முழுவதுமாக பாதிக்கப்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தியாவின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் பிரதமராக இருப்பவர் நேரில் வந்து பார்ப்பதுதான் மரபு.

அரசு அதிகாரிகள் தனி குழுவினர் வந்து பார்வையிட்டவர்கள் அவர்களது கருத்துக்களை மட்டுமே மத்திய அரசுக்கு தெரிவிப்பார்கள். என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை பிரதமர் நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும். அவர் பார்த்திருந்தால் என்ன நிலைமை என்பதை உணர்ந்து இருப்பார்.

பார்வையிட்ட பின்பு இடைக்கால நிவாரணமாக அளித்துள்ள ரூபாய் 200 கோடியை உயர்த்தியும் தந்திருப்பார். விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. மரங்கள் வேறோடும் சாய்ந்துள்ளது. இதனை நேரில் பார்ப்பது என்பது வேறு அறிக்கை மூலம் படங்கள் மூலம் பார்ப்பது என்பது வேறு, பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக மக்கள் இந்திய துணை கண்டத்தின் மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் பிரதமர் மோடி உடனடியாக வந்திருக்க வேண்டும். அவருக்கு தமிழக பா.ஜ.க.வினர் எடுத்து சொல்லி இருக்க வேண்டும். ஆட்சியிலும், கட்சியிலும் இருப்பவர்கள் இதனை சரியாக எடுத்துச் சொல்லாத காரணத்தினால் அவருக்கு நிலைமை தெரியவில்லை என தெரிகிறது.

எந்த நிலை என்றாலும் பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். வரமுடியாத சூழ்நிலை மாறி விரைவில் வருவார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #Modi #KPMunuswamy
Tags:    

Similar News