செய்திகள்

பாவூர்சத்திரத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு- சிறுவன் உள்ளிட்ட 2 பேர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

Published On 2018-11-26 14:07 GMT   |   Update On 2018-11-26 14:07 GMT
பாவூர்சத்திரம் அருகே பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நகை பறித்து சென்றனர். போலீசார் அவர்களை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியை சேர்ந்த வேலாயுதம் மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் தனது மகனுடன் ஆலங்குளத்துக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினர். பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்தனர். அது கவரிங் நகையாகும்.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பாவூர்சத்திரம் செட்டியூர் ரோட்டில் சந்தேகப் படும்படியாக நின்றிருந்த நபரை பாவூர்சத்திரம் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரும், அவரது நண்பரும் சேர்ந்து லட்சுமியிடம் நகைபறித்தது தெரியவந்தது.

இதையடுத்து நண்பரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் அவர்கள் கடையநல்லூர் புளியமுக்கு தெரு அயூப்கான் மகன் யாசிர்முகமம் (வயது18), கடையநல்லூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நத்தங்கர்பவா மகன் முகமதுஜமீன் (வயது 17) என்பதும் தெரியவந்தது.

இருவரும் நண்பர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கி கொண்டு தூத்துக்குடியில் உள்ள நண்பரை பார்க்க சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மாலையில் ஊருக்கு திரும்பும் வழியில் முறப்பநாடு ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துள்ளனர். அது கவரிங் நகை ஆகும்.

இதேபோல் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்து நகை பறிக்க முடியவில்லை, பின்னர் தென்காசி வரும் வழியில் பழைய பேட்டையில் ஒரு பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற போது அந்தப் பெண் இவர்களை கீழே தள்ளியுள்ளார். இதனால் அந்த பெண்ணிடமும் நகை பறிக்க முடியவில்லை.

பின்னர் கடையநல்லூர் வரும் வழியில் பாவூர்சத்திரத்தில் லட்சுமியிடம் கவரிங் நகையை பறித்தது தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இருவருக்கும் வயது குறைவு என்பதால் அவர்களை பாளையங்கோட்டை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

Similar News