செய்திகள்

6 வயதுக்குட்பட்ட தென்னை மரங்களை மீண்டும் நடலாம் - வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்

Published On 2018-11-22 10:11 GMT   |   Update On 2018-11-22 10:11 GMT
கஜா புயல் பாதித்த பகுதியில் 6 வயதுக்குட்பட்ட தென்னை மரங்களை மீண்டும் நடலாம் என்று வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கூறினார். #GajaCyclone #CoconutTrees
வடவள்ளி:

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகமானது இதுவரை பல்வேறு முக்கிய பயிர்களில் 826 ரகங்கள், 1500 வேளாண் தொழில் நுட்பங்கள் மற்றும் 166 வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை உருவாக்கி உள்ளது.

வேளாண் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளின் பயனாக தமிழ்நாடானது மாறி வரும் பருவ காலங்களிலும் 120 லட்சம் டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்கள் உற்பத்தி செய்து தன்னிறைவு அடைந்து டெல்லியில் உள்ள மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு குழுவின் கிரிஷிகர்மான் விருதினை கடந்த 6 வருடங்களில் 4 முறை பெற்றுள்ளது.

தென்னை மரங்கள் கஜா புயலால் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கைவசம் உள்ள நெல் விதைகள் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களை எல்லாம் நேராக நிமிர்த்தி காப்பாற்றுவது கடினம். 5 அல்லது 6 ஆண்டுகள் ஆன மரங்களை நிமிர்த்தி வைத்து 3 மாதங்களில் காப்பாற்ற முடியும். புதியதாக 25 லட்சம் தென்னை நாற்றுகள் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவை. இதற்கு 40 லட்சம் தேங்காய் விதைகள் தேவை. 40 லட்சம் தென்னை விதைகளில் இருந்து நாற்றுகள் உற்பத்தி செய்ய ஒரு வருடம் ஆகும்.



புதியதாக தென்னை நாற்றுகள் வாங்க கர்நாடக அரசுடன் பேசி வருகின்றோம். அங்கிருந்து 5 லட்சம் நாற்றுகள் வரை வாங்க முடியும்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளோம்.

தென்னை நாற்று உற்பத்தி மையம் தஞ்சாவூர், கோவை பகுதிகளில் மட்டும் இருக்கின்றது. வருங்காலத்தில் இது போன்ற சேதம் ஏற்படாமல் இருக்க நடவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். இருக்கின்ற தரமான தென்னங்கன்றுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 8 ஆண்டுகள் ஆன தென்னை மரங்களை மீண்டும் காப்பாற்றுவது கடினம். சாய்ந்து போன 40 ஆண்டுகளுக்கு மேலான தென்னை மரங்களை காப்பாற்றுவது கடினம். சாய்ந்த ஒவ்வொரு மரங்களை காப்பாற்ற 500 ரூபாய் வரை செலவாகும்.

பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு குழு கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று இருக்கின்றது. கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கெல்லாம் நர்சரி அமைக்க முடியும் என்பதை நேரில் பார்த்து அங்கு நர்சரி அமைக்க உள்ளோம்.

10 அல்லது 15 நாட்களில் புதிய தென்னை நாற்று நடவிற்கான பணிகள் தொடங்கும். நெல் பாதிப்பு அதிகளவு இல்லை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வாழைக்கு இன்சூரன்ஸ் செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். கடல் நீர் விவசாய நிலங்களில் புகுந்ததால் நிலத்தில் பாதிப்பு ஏற்படும். அதை சரி செய்ய வழிமுறைகள் உள்ளது.

கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மாற்றாக புதிய தென்னை மரங்கள் மாற்று நடவு செய்ய இரண்டு அல்லது மூன்று வருடங்களாகும்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CoconutTrees

Tags:    

Similar News