செய்திகள்
திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் வீடு கஜா புயலால் சேதமடைந்து இருப்பதை காணலாம்

திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீடு கஜா புயலில் சேதம்

Published On 2018-11-21 05:15 GMT   |   Update On 2018-11-21 05:15 GMT
திருக்குவளையில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த வீடு கஜா புயலில் சேதம் அடைந்து உள்ளது. #GajaCyclone #Karunanidhi
திருவாரூர்:

நாகை மாவட்டம், திருக்குவளையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த வீடு உள்ளது. அந்த வீடு முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையார் நினைவு நூலகமாக கருணாநிதி உயிரோடு இருந்தபோதே மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த வீட்டில் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகத்தம்மாள் ஆகியோரின் உருவ சிலைகள், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவருடைய பழைய நினைவுகளை கூறும் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த வீட்டை தி.மு.க.வினர் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

பழமை மாறாமல் அந்த ஓட்டு வீடு பராமரிக்கப்பட்டு நினைவு சின்னமாக போற்றப்படுகிறது. இந்த நிலையில் கஜா புயலின் தாக்கத்தில் இந்த வீடும் தப்பவில்லை. கருணாநிதி பிறந்த வீட்டின் அருகில் இருந்த தென்னை மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்தது. வீட்டுக்கு முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ‘நூலகம்’ என்ற வாசகம் அடங்கிய பெயர் பலகை மரம் விழுந்ததில் சேதமடைந்தது. மேலும் சூறாவளி காற்றினால் வீட்டின் ஓடுகளும் உடைந்தன.

இந்த தகவலை அறிந்த கருணாநிதியின் குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்ததுடன், உடனடியாக சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்குமாறு கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், கருணாநிதி பிறந்த வீட்டை உடனடியாக சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.  #GajaCyclone #Karunanidhi
Tags:    

Similar News