செய்திகள்

மேச்சேரியில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

Published On 2018-11-17 06:58 GMT   |   Update On 2018-11-17 06:58 GMT
மேச்சேரியில் அதிக அளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami
நங்கவள்ளி:

சேலம் மாவட்டம் மேச்சேரியில் ரூ.158.64 கோடி மதிப்பிலான நங்கவள்ளி-மேச்சேரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் குடிநீர் குழாயை திறந்து வைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கிய அவர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 327 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சாலை வசதிகள், சாலை விரிவாக்க திட்டமும் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஓமலூர், மேச்சேரி, தாரமங்கலம் பகுதிகளில் தக்காளி உள்பட பல காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த விவசாயிகள் பயன் அடையும் வகையில் ஓமலூர்-மேச்சேரி இடையே 3 ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழசந்தை அமைக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட ஆய்வு பணி தற்போது தொடங்கி உள்ளது. இதனால் பழங்கள் வீணாகாமல் தடுக்கப்படும்.

இந்த சந்தையில் விவசாயிகள், வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும் குளிர் பதன கிடங்கில் விவசாயிகள் விளை பொருட்களை 15 நாட்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு லாபம் தரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செட்டு நீர் பாசனத்திற்கு வேளாண் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஓடைகள் இருக்கும் இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பணைகள் கட்ட 3 ஆண்டுகளில் தமிழக அரசு ரூ. 1000 கோடி ஓதுக்குகிறது. மேச்சேரியில் புற வழிசாலை அமைக்கப்படும். ரெயில்வே கடப்புகளில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். #TNCM #EdappadiPalaniswami
Tags:    

Similar News