செய்திகள்

இடைத்தேர்தல் வருவதால் வருகிறீர்களா?- ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்ட மக்கள்

Published On 2018-11-17 04:30 GMT   |   Update On 2018-11-17 04:30 GMT
பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #OPanneerSelvam
பெரியகுளம்:

பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட 28, 29,30 ஆகிய வார்டுகளில் கஜா புயல் காரணமாக வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. ஆனால் அதிகாரிகள் யாரும் நிவாரணபணிகளை மேற்கொள்ளவில்லை.

எனவே அப்பகுதியை சேர்ந்த மக்கள் கால்நடைகளுடன் தண்டுபாளையத்தில் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆர்.டி.ஓ மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறையை சேர்ந்த ஊழியர் ஒருவர் மறியல் செய்தவர்களை ஒருமையில் பேசினார்.

இதனால் தள்ளுமுள்ளு மற்றும கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்தனர். அதன்பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3 வார்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நகராட்சி ஆணையர் கமலாவுடன் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு இடைத்தேர்தல் வருவதால் நீங்கள் வருகிறீர்களா? எங்கள் பகுதிக்கு யாரும் வரக்கூடாது.

ஓட்டு வாங்கும்போது வந்த நீங்கள் இதுவரை எங்களது பகுதியில் என்ன நடக்கிறது என்றுகூட பார்க்கவில்லை. வெள்ளம் பாதித்த எங்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கவேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை வீசி எறிந்துவிடுவோம் என்று ஆவேசமாக பேசினர்.

அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பொதுமக்களை சமரசம் செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வேறுபகுதிக்கு அழைத்துச்சென்றனர்.

சொந்த ஊரிலேயே ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக பொதுமக்கள் செயல்பட்டதால் அ.தி.மு.கவினரும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். #GajaCyclone #OPanneerSelvam
Tags:    

Similar News