செய்திகள்

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார்? தீபா, தீபக் ஆகியோருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

Published On 2018-11-15 08:47 GMT   |   Update On 2018-11-15 08:47 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை பராமரிக்க கோரிய வழக்கில் தீபா, தீபக் ஆகியோருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. #Jayalalithaa #ADMK #ChennaiHighCourt
சென்னை:

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் புகழேந்தி. அ.தி.மு.க. நிர்வாகியான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

‘மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் என்று சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இந்த சொத்துக்கள் யாருக்கு என்று ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அதனால், இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க ஒரு நிர்வாகியை ஐகோர்ட்டு நியமிக்க வேண்டும்’.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்த அவர், ‘ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதால், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க முடியாது’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் புகழேந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோர் இன்று விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் நந்தகுமார் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதிகள், ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்கா பிறப்பித்த தீர்ப்பில் அந்த சொத்துக்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.



எனவே, பல இடங்களில் ஏராளமான சொத்துக்கள் அவர் பெயரில் உள்ளது. அதேநேரம், அவரது வாரிசு என்று தீபா, தீபக் என்று இருவர் உள்ளனர். எனவே, இந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விடுகிறோம். இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர். #Jayalalithaa #ADMK #ChennaiHighCourt
Tags:    

Similar News