செய்திகள்

டேங்கர் லாரி - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி

Published On 2018-11-01 17:57 GMT   |   Update On 2018-11-01 17:57 GMT
குமாரபாளையம் அருகே, டேங்கர் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
குமாரபாளையம்:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மகன் விஜய் (வயது 18). கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது ஒரே மகன் ராகுல் (18). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். இதற்காக இவர்கள் 2 பேரும் தினமும் பஸ்சில் கல்லூரிக்கு வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று மாணவர்கள் இருவரும் ஹால் டிக்கெட் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்தனர். பின்னர் ஹால்-டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். விஜய் மோட்டார் சைக்கிளை ஓட்ட, ராகுல் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

குமாரபாளையம் - கத்தேரி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் சென்றபோது, இவர்களுக்கு முன்னால் ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த டேங்கர் லாரியை இவர்கள் இடது பக்கமாக முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதை லாரியின் டிரைவர் கவனிக்கவில்லை. டேங்கர் லாரியும், மோட்டார் சைக்கிளும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன.

இதில் டேங்கர் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி விஜய், ராகுல் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கி பலியான இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, டேங்கர் லாரி டிரைவர் ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் (45) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர்கள் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News