செய்திகள்

கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்

Published On 2018-10-31 08:05 GMT   |   Update On 2018-10-31 08:05 GMT
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கருப்பு உடை அணிந்து ஊழியர்கள் இன்று மறியலில் ஈடுபட்டனர். #Nutritionstaff #Nutritionstaffstruggle
சென்னை:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

காலமுறை ஊதியம், பணிக்கொடை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் சத்துணவு பணி பாதிக்கப்பட்டது.

சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் இதில் ஈடுபடுவதால் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், சுயஉதவி குழுக்கள், ஊராட்சி செயலர்கள் மூலம் சத்துணவு வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகளுடன் நேற்று சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் எந்த முடிவும் ஏற்படவில்லை. கோரிக்கைகள் பரிசீலிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காததால் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கருப்பு உடை அணிந்து ஊழியர்கள் இன்று மறியலில் ஈடுபட்டனர்.

சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டம் குறித்து சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரம்மாள் கூறியதாவது:-

“எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு செவிசாய்க்கவில்லை. ஒரு சதவீதம் கூட நிறைவேற்ற முன்வரவில்லை. முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய கோரினோம். அதற்கும் வாய்ப்பு தரவில்லை. அதனால் இன்று கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இன்று மாலை மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்கிறோம்” என்றார். #Nutritionstaff #Nutritionstaffstruggle

Tags:    

Similar News