செய்திகள்

தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2018-10-28 08:20 GMT   |   Update On 2018-10-28 08:20 GMT
தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan #BJP

சென்னை:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசியலில் காங்கிரசுடன் தி.மு.க. மீண்டும் கூட்டணி சேருவது கருணாநிதியின் வார்த்தைப்படி கூடா நட்பு ஒன்று கூடுகிறது. இந்த கூட்டணியால் மீண்டும் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியையும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியையும் அமைக்க துடிக்கிறார்கள். இந்த கூட்டணியால்தான் 2009-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள்.

இலங்கை அரசால் தமிழர்களை ஒரு காலத்திலும் வெல்ல முடியாது. தமிழர்களை வெல்வதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு துணை நின்றதாக ராஜபக்சே ஏற்கனவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இப்போது அவர் இலங்கை பிரதமராகவும் ஆகி இருக்கிறார்.

காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என்பது மீண்டும் 2009-ஐ நோக்கி செல்வதற்கு சமம். அந்த நிலைமை மீண்டும் உருவாவதற்கு இடம் கொடுக்க கூடாது என்பது எனது வேண்டுகோள்.


தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது உண்மை. அதன் வெளிப்பாடுதான் 1972-ல் அ.தி.மு.க. உருவெடுத்ததும், அதேபோல் ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் உருவானதும்.

இப்போதைய அரசியல் சூழலில் கழகங்கள் இல்லாத தமிழகத்தை காண மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு ஒரு வலுவான கூட்டணி அமைய வேண்டும். வருகிற தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதற்கு பா.ஜனதா முயற்சிக்கும். அதே நேரத்தில் கூட்டணிக்காக பா.ஜனதா யாரிடமும் கெஞ்சாது.

தம்பித்துரை, பா.ஜனதாவை ஏன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்று தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிடக் கூடாது. தம்பித் துரை, பா.ஜனதாவை விமர்சனம் செய்வதற்கு பின்புலம் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

கமல் கட்சி தொடங்கி இருக்கிறார். ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. முதலில் கட்சியை தொடங்கி அரசியல் களத்துக்குள் வரட்டும். மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பார்ப்போம். இப்போதே அவர்கள் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை சொல்ல முடியாது.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BJP

Tags:    

Similar News