செய்திகள்

நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்

Published On 2018-10-27 11:04 GMT   |   Update On 2018-10-27 11:04 GMT
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு ஊதிய பணப்பலனை அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு அங்கேயே தங்கி இருந்தது போல, நேற்று இரவும் சுமார் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தங்கி இருந்து போராட்டம் நடத்தினார்கள்.

அவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது. இன்று 3-வது நாளாக தொடர் போராட்டத்தில் 500-க்கு மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் பிச்சுமணி, கோவில்பிச்சை, தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள சத்துணவு ஊழியர்கள் பெரும் பாலானவர்கள் காலையில் பள்ளி கூடங்களுக்கு சென்று சத்துணவு சமைத்து விட்டு பிற்பகல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லும் வழியில் சத்துணவு ஊழியர்கள் தங்கி இருந்து இன்று 3-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் நிர்வாகிகள் பாக்கிய சீலி, துரைப்பாண்டியன், பால்ராஜ், சேகமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசி வந்தனர். #tamilnews
Tags:    

Similar News