செய்திகள்

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை

Published On 2018-10-26 12:11 GMT   |   Update On 2018-10-26 12:11 GMT
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:

ராஜாக்கமங்கலம் பாம்பன் விளையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 34). ஆட்டோ டிரைவர். இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கனவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த சரவணன் சம்பவத்தன்று வீட்டின் அருகே வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் தங்கராஜ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அய்யம் பெருமாள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுசீந்திரம் அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் வேல்(38). பி.இ. பட்டதாரி. இவருக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சரியான வேலை கிடைக்காததால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த செந்தில்வேல் கடந்த 20-ந் தேதி வீட்டில் தூக்குபோட்டு கொண்டார்.

இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

கருங்கல்லை அடுத்த பொதுவன்விளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(44). தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி செல்வத்தை பிரிந்து சென்று விட்டார். இதில் மன வருத் தத்துடன் காணப்பட்டு வந்த அவர் வீட்டின் அருகே வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஞ்சுகிராமம் புன்னார் குளம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(29). இவர் ஈரோட்டில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து முடித்து உள்ளார். இவருக்கு வேலை கிடைக்காததாலும், திடீர் உடல்நலக்குறைவு காணரமாகவும் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News