செய்திகள்

வால்பாறை, மேட்டுப்பாளையத்தில் கொட்டி தீர்த்த கனமழை

Published On 2018-10-17 10:12 GMT   |   Update On 2018-10-17 10:12 GMT
வால்பாறை மற்றும் மேட்டுப்பாளையத்தில் கொட்டி தீர்த்த கனமழை பெய்யத் தொடங்கியது.

மேட்டுப்பாளையம்:

வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் வால்பாறை பகுதியில் பகல் நேரத்தில் அதிக வெப்பமும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை வட்டார பகுதி முழுவதும் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் மதியம் மற்றும் மாலை கனமழை பெய்துவருகிறது. நேற்றும் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் மதியம் 12 மணி முதல் 5 மணிவரை கனமழை பெய்தது.

இதனால் வால்பாறை பகுதி பொது மக்கள் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வால்பாறை பகுதியில் பெய்து வரும் மழைகாரணமாக கடந்த மாதத்தில் குறையைத் தொடங்கிய சோலையார் அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் சோலையார் மின்நிலையம்-2 இயக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.அவ்வப் போது நிறுத்தப்பட்டாலும் சோலையார் மின் நிலையம்-1 ம் இயக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் பெய்யும் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி பெய்துவருகிறது.வால்பாறை பகுதியை பொறுத்தவரை இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கி மிக கனமழையாக பெய்தது.

இதே போல வடகிழக்கு பருவமழையும் உரிய நேரத்தில் தொடங்கி பல சமயங்களில் லேசான மழை பெய்த போதும் அவ்வப்போது மிக கனமழையாக பெய்துவருகிறது.வடகிழக்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கியுள்ளதால் அதிகளவில் மழை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ஆழியார் அணையிலிருந்து சமவெளிப்பகுதி மக்களின் விவசாயத் தேவைகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் வால்பாறை பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு சமவெளிப் பகுதி விவசாயிகளுக்கு கூடுதலாக தண்ணீர் கிடைப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மாலை 5 மணிக்கு திடீரென எதிர்பாராதவிதமாக மழை பெய்யத்தொடங்கியது.சிறிது சிறிது நேரமாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.பஸ்நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது.

மாலை 5 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியதால் பள்ளி சென்ற மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பள்ளி மாலை நேரம் முடிந்ததும் மாணவ- மாணவிகள் நனைந்து கொண்டே பஸ் நிலையம் வந்தனர். மழை காரணமாக பஸ்கள் சற்று தாமதமாக வந்ததால் பஸ்பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கேத்தி லவ்டேல் ரெயில்நிலையங்கள் இடையே மரங்கள் சாய்ந்து ரெயில் பாதையில் விழுந்ததாலும். மழை காரணமாகவும் சுற்றுலாப்பயணிகளின் நலனைக்கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் ஊட்டி மலைரெயில் போக்குவரத்தை இன்று ஒருநாள் மட்டும் ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

Tags:    

Similar News