செய்திகள்

பூந்தமல்லி அருகே புதிதாக கட்டப்படும் விஜயகாந்த் வீட்டில் 2 மாடுகள் திருட்டு

Published On 2018-10-12 07:09 GMT   |   Update On 2018-10-12 07:09 GMT
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிதாக கட்டப்படும் விஜயகாந்த் வீட்டில் இருந்த 2 மாடுகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் அக்கோ நகர் 3-வது தெருவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான வீடு கட்டப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு இந்த பணி தொடங்கியது. சமீபத்தில் வீடு கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் அப்பாராவ் என்பவர் குடும்பத்துடன் தங்கி காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார். அங்கு வளர்க்கப்படும் 3 கறவை மாடுகளையும் அப்பாராவே பராமரித்து வந்தார். இவை வேங்கை இன மாடுகள் ஆகும்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாடுகள் வீட்டிலேயே கட்டப்பட்டிருந்தன. நேற்று காலையில் அப்பாராவ் எழுந்து பார்த்த போது 2 மாடுகளை காணவில்லை. அதை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி அவர் விஜயகாந்த் வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். மாடுகள் திருட்டு போனது தொடர்பாக பூந்தமல்லி நகர தே.மு.தி.க. செயலாளர் ஸ்ரீராம் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விஜயகாந்த் வீட்டில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அதில் பார்த்த போது மாடு திருட்டு போன காட்சிகள் சரியாக பதிவாகவில்லை. விஜயகாந்த் வீட்டின் அருகில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் மாட்டை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News