செய்திகள்

போலீஸ் கைரேகை பிரிவு போட்டி தேர்வுகளை தமிழில் நடத்த மறுப்பதா? ராமதாஸ் கண்டனம்

Published On 2018-10-08 11:18 GMT   |   Update On 2018-10-08 11:18 GMT
தமிழகக் காவல்துறையின் கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியில் வினாத்தாள்களை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகக் காவல்துறையின் கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியில் வினாத்தாள்களை வழங்க மறுப்பது தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோக மாகும். இது கண்டிக்கத்தக்கது.

தமிழகக் காவல்துறையின் கைரேகைப் பிரிவுக்கு 202 சார்பு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுப்படவுள்ளனர். இதற்கான ஆள்தேர்வுக்கு கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு 28.09.2018 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்தப் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெறும் நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. போட்டித் தேர்வுகள் எந்த மொழியில் நடத்தப்படும் என்று தேர்வர்கள் எழுப்பிய வினாவுக்கு விடையளித்துள்ள சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், போட்டித்தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும், தமிழில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியிருக்கிறது. இம்முடிவு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தமிழகக் காவல்துறையின் தொழில்நுட்பப் பிரிவுக்கு 309 சார்பு ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஜூலை 11-ந் தேதி வெளியிடப்பட்டு கடந்த 30.09.2018 அன்று போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான விடைத்தாள்களும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்தன. இதனால். கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கான போட்டித் தேர்வும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது.

காவல்துறை சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்பட்டால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். ஆங்கில வழியில் படித்த, தமிழகத்தில் வாழும் பிற மொழி பேசும் மக்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் வழியில் படித்த, தமிழ் பேசும் பட்டதாரிகள் இந்தப் பதவிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு செய்யப்படுகிறதோ என்ற ஐயமும் எழுகிறது.

கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளும் இதற்கு முன்பு வரை தமிழ் மொழியில் நடத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது இப்போது மட்டும் அந்த வாய்ப்பும், உரிமையும் மறுக்கப்படுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

தமிழக அரசுப் பணிகளில் 20 சதவீதம் இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால், கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் நியமனத்தில் இந்த ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எதிரான சதியை இது உறுதி செய்கிறது. தமிழக அரசு தமிழில் படித்தவர்களின் உரிமைகளை பறிப்பதை ஏற்க முடியாது. எனவே, கைரேகைப் பிரிவு சார்பு ஆய்வாளர் பணிக்கான போட்டித்தேர்வை தமிழ் மொழியில் நடத்தவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீட்டு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். #Ramadoss
Tags:    

Similar News