செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி 8-ந் தேதி டெல்லி பயணம்

Published On 2018-10-06 19:24 GMT   |   Update On 2018-10-06 19:24 GMT
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8-ந் தேதி (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். #EdappadiPalaniswami #NarendraModi #Delhi
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8-ந் தேதி (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் செல்வதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி பிரதமர் அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 8-ந் தேதி பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்தத் தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று உறுதிப்படுத்தினார்.



8-ந் தேதி டெல்லி செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் செல்ல இருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு அளிப்பார் என்று தெரிகிறது.

குறிப்பாக, மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது. மேலும், அரசியல் தொடர்பாகவும் இந்த சந்திப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி குறித்தும் முக்கியமாக பேசப்படும் என்று தெரிகிறது.

ஏனென்றால், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகிவருகிறது. கூட்டணி கணக்கை எல்லாம் முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக நரேந்திர மோடி-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு இருக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.  #EdappadiPalaniswami #NarendraModi #Delhi
Tags:    

Similar News