செய்திகள்

இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

Published On 2018-10-04 18:01 GMT   |   Update On 2018-10-04 18:01 GMT
இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி குரும்பலூர் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி காலை, மதியம் என 2 சுழற்சி முறையில் இயங்குகிறது. காலையில் கலை பாடப்பிரிவுகளுக்கும், மதியம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த கல்லூரியில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்வி ஆண்டில் கல்லூரி திறந்து இதுவரை, அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட வில்லையாம். பழைய பஸ் பாஸ் காண்பித்தும், அரசு பஸ்சில் பயணம் செய்ய முடியவில்லை. இதனால் கல்லூரிக்கு பஸ்சில் வந்து, செல்லும் போக்குவரத்து செலவுக்கு அதிக தொகை செலவாகிறது. இதனால் ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் குடும்பமும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் நேற்று மதியம் 12.30 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மதியம் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளும் மறியலில் கலந்து கொண்டனர். அப்போது மழை தூறிக்கொண்டு இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் பெரம்பலூர்-துறையூர் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் இலவச பஸ் பாஸ் உடனடியாக வழங்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் கல்லூரி முதல்வர் மனோகரன், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார், கல்லூரி முதல்வர், போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோர் மாணவ, மாணவிகளிடம் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை கல்லூரி அடையாள அட்டையை பயன்படுத்தி அரசு பஸ்சில் அனுமதிக்கப்பட்டுள்ள கிலோமீட்டர் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மதியம் சுமார் 2.30 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதனை தொடர்ந்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். 
Tags:    

Similar News