செய்திகள்

மத்திய அரசை கண்டித்து சென்னையில் 11-ம் தேதி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-10-02 14:35 GMT   |   Update On 2018-10-02 14:35 GMT
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து சென்னையில் 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூர்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் பெரம்பலூர் கர்ணம் சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே. வேல் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜாமணி, பொருளாளர் காமராஜ் மூத்த வழக்கறிஞர்கள் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உயர் கல்வி ஆணைய வரைவு சட்டத்தில் வழக்கறிஞர்கள் சட்டத்தை மாற்றம் செய்வதை திரும்ப பெற்றுக்கொள்ள வலியுறுத்த வேண்டும், உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பணியிடங்கள் நிரப்பப்படும் போது பார் கவுன்சில் தலைவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும்,

வழக்கறிஞர்கள் நலனுக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வக்கீல்கள் நலனுக்காக ரூ.25 லட்சம் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

முன்னதாக பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வள்ளுவர் நம்பி வரவேற்றார். முடிவில் செயற்குழு உறுப்பினர் எழிலரசன் நன்றி கூறினார்.

தொடர்ந்து வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வழக்கறிஞர்கள் சங்கங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் பட்சத்தில் அந்த வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு அனைத்து வழக்கறிஞர்கள் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்த தீர்ப்பினை மத்திய அரசு சட்டமாக்க முயற்சி செய்து வருகிறது. எனவே மத்திய அரசை கண்டித்தும் சட்டமாக்க முயற்சி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடகோரியும் இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வருகிற 11-ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News