செய்திகள்

கருணாசை போல எச்.ராஜாவும் சிறைக்கு செல்வார் - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-09-26 03:29 GMT   |   Update On 2018-09-26 03:29 GMT
திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாசை போல பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் சிறைக்கு செல்வார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar
அடையாறு:

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பள்ளியில் லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தினவிழா நேற்று நடைபெற்றது. நடராஜ் எம்.எல்.ஏ., ஜெயவர்தன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாப்பூர் தொகுதியில் உள்ள சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். கருணாஸ் பேசியவிதம் சமூகங்களை தூண்டுகின்ற வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்திருந்தது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தன் கடமை, பொறுப்புகளை மறந்து இவ்வாறு பேசியிருப்பதால், அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர வேண்டுமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மதக்கலவரம், ஜாதி கலவரம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்களிலும் செயல்படுபவர்கள் அனைவருக்கும் மாமியார் வீடு ஜெயில் தான். கடுமையான வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், நிச்சயமாக எச்.ராஜா அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும். சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார்.

எங்களுடைய ஆட்சி அடிமை ஆட்சி என்று கூறுவது முற்றிலும் தவறானது, எங்கள் ஆட்சி ஒரு சுதந்திரமான ஆட்சி. எங்களுடைய தனித்தன்மையை எந்த நிலையிலும் இழப்பதாக இல்லை. கொத்தடிமையாக இருப்பது தி.மு.க.வுக்கு வேண்டுமானால் வழக்கமாக இருக்கலாம். எங்களை பொறுத்தவரை அரசுகளுக்கு இடையேயான ஒரு இணக்கமான போக்கு இருக்கிறதே தவிர, கட்சிகளுக்குள் எந்தவிதமான இணக்கமும் இல்லை.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெறுவதால் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் டி.டி.வி.தினகரன் பெயரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் பெயரும் அழைப்பிதழில் போட்டுள்ளோம். இதுபோன்ற மரபு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்படவில்லை. அவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதும், வராததும் அவர்களின் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar

Tags:    

Similar News