செய்திகள்

கோத்தகிரி அருகே வீடு, மளிகைக்கடையில் தீ விபத்து

Published On 2018-09-17 17:49 GMT   |   Update On 2018-09-17 17:49 GMT
கோத்தகிரி அருகே வீடு, மளிகைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
கோத்தகிரி:

கோத்தகிரி அருகே வெஸ்ட் புரூக் பகுதியை சேர்ந்தவர் காதர் இப்ராகிம்(வயது 43). இவர் தனது வீடு உள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். காதர் இப்ராகிம் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வீடு மற்றும் கடை திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. புகை மூட்டம் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் காதர் இப்ராகிம் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளார். அப்போது வீட்டின் ஒரு பகுதியிலும், கடையிலும் தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் தீ விபத்து குறித்து கோத்தகிரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து போலீசாரும், வருவாய்த்துறையினரும் அங்கு வந்தனர்.

கொழுந்துவிட்டு எரிந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், மேற்கூரை சேதம் அடைந்தது.

பின்னர் சுமார் 1½ மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கடை மற்றும் வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News