செய்திகள்

மொபட்டில் கொண்டு சென்ற புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2018-09-16 16:08 GMT   |   Update On 2018-09-16 16:08 GMT
கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக மொபட்டில் கொண்டு சென்ற புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலைக்கோட்டை:

உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில், விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்கள் மொபட்டில் கொண்டு சென்று வினியோகம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று மாலை உணவுபாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி சித்ரா தலைமையில் அதிகாரிகள் திருச்சி-மதுரை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் புகையிலை பொருட்களை ஏற்றி கொண்டு ஒரு நபர் சென்றார். அந்த, நபரை நிற்குமாறு சைகை காட்டியபோது நிற்காமல் வேகமாக சென்றதால் அவரை அதிகாரிகள் காரில் விரட்டி சென்று மெயின்கார்டுகேட் சிக்னல் அருகே மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து அவர் மொபட்டில் வைத்து இருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், மொபட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் உறையூரை சேர்ந்த சிவகுமார் என்பதும், மாநகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு புகையிலை பொருட்கள் வினியோகம் செய்ததற்கான ரசீது வைத்து இருந்ததும் தெரியவந்தது.

ஆனால், அவர் புகையிலை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார். அவற்றை பதுக்கி வைத்துள்ள குடோன் எங்குள்ளது என்ற தகவல்களை தெரிவிக்க மறுத்து விட்டார். இதையடுத்து உணவுபாதுகாப்புத்துறையினர் அவரை கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News