செய்திகள்

வியாசர்பாடியில் மாயமான சிறுமி 3 மணிநேரத்தில் மீட்பு

Published On 2018-09-16 08:24 GMT   |   Update On 2018-09-16 08:24 GMT
வியாசர்பாடியில் சிறுமி மாயமானது குறித்து பெற்றோர் புகார் அளித்த 3 மணிநேரத்தில் போலீசார் சிறுமியை மீட்டனர்.
பெரம்பூர்:

வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே சாலையோரம் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரது மனைவி லட்சுமி. ஆந்திராவை சேர்ந்த இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களது 3 வயது மகள் கீதாம்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவளை லட்சுமி புளியந்தோப்பில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது திடீரென்று கீதாம்மா மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்

இந்தநிலையில் வியாசர்பாடி கணேசபுரம் சாலையில் அழுதுகொண்டு இருந்த கீதாம்மாவை வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், எம்.கே.பி.நகர் சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் மீட்டனர்.

பின்னர் பெற்றோரை வரவழைத்து சிறுமியை ஒப்படைத்தனர். புகார் அளித்த 3 மணிநேரத்தில் மாயமான சிறுமியை மீட்டனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் இருந்து சிறுமி அவளாகவே மாயமானாளா? அல்லது யாராவது கடத்தி சென்றுவிட்டு போலீசுக்கு பயந்து விட்டு சென்றார்களா? என்று விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News