செய்திகள்

தேங்காய் திருட்டு போன சம்பவம்- உருட்டுக்கட்டையால் தாக்கி விவசாயி கொலை

Published On 2018-09-10 09:35 GMT   |   Update On 2018-09-10 09:35 GMT
பெரியபாளையம் அருகே தேங்காய திருட்டு போனது சம்பவத்தால் விவசாயி உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி அகரம் இருளர் காலனியில் வசித்து வந்தவர் காசிரெட்டி (வயது 65). விவசாயி. இவர் தனது வீட்டில் தென்னை மரம் வளர்த்து வந்தார். இந்த மரத்தில் இருந்த தேங்காய் அடிக்கடி திருடு போனது.

இந்த நிலையில் தேங்காய்களை அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ள செல்வம் என்பவரது தம்பி மகன் திருடி வந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி காசிரெட்டி, நேற்று இரவு கடையில் இருந்த செல்வத்திடம் கூறினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வம் உருட்டுக்கட்டையால் காசி ரெட்டியை தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே செல்வம் தப்பி ஓடி விட்டார்.

படுகாயம் அடைந்த காசிரெட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே காசிரெட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி அறிந்ததும் காசி ரெட்டி உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆரணி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். செல்வத்தை உடனடியாக கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருந்த செல்வத்தை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் முன்பு திரண்டிருந்த காசிரெட்டியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

கொலையுண்ட காசிரெட்டிக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், மாசிலாமணி, தங்கராஜ் என்ற மகன்களும் உள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News