செய்திகள்

பெட்ரோல் விலை இன்று 84 ரூபாயை நெருங்கியது

Published On 2018-09-10 06:52 GMT   |   Update On 2018-09-10 06:52 GMT
பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83.91 ஆக உயர்ந்தது. டீசல் விலையும் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்தது. #PetrolPriceHike
சென்னை:

இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில் 83 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையைச் சார்ந்தே உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்தாலோ அல்லது கச்சா எண்ணை இறக்குமதி குறைந்தாலோ... அது பெட்ரோல், டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அது போல டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விடுகிறது.

தற்போது கச்சா எண்ணை விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ரூபாய் மதிப்பிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து பெட்ரோல், டீசல் விலையை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன.

கடந்த மாதம் முழுக்க பெட்ரோல், டீசல் விலை தினமும் 10 காசு, 20 காசு என்று உயர்ந்தபடி இருந்தது. இந்த மாதமும் கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு சற்று அதிகமாக உள்ளது.

இன்றும் (திங்கட்கிழமை) பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு காணப்பட்டது.


இன்று காலை 6 மணிக்கு பெட்ரோல், டீசல் புதிய விலை விபரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்தது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83.91 ஆக உயர்ந்தது.

பெட்ரோல் விலை 84 ரூபாயை நெருங்கி விட்ட நிலையில் நாளை விலை உயரும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 84 ரூபாயை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலுக்கு இணையாக டீசல் விலையும் அதிகரித்தப்படி இருக்கிறது.

இன்று டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்தது. இதனால் விற்பனை நிலையங்களில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.76.98-க்கு விற்கப்படுகிறது.

நாளை விலை உயரும் பட்சத்தில் டீசல் விலை ரூ.77-ஐ கடக்க வாய்ப்புள்ளது. #PetrolPriceHike
Tags:    

Similar News