செய்திகள்

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 27 பேர் தயார் - சரத்குமார் அறிவிப்பு

Published On 2018-08-31 09:57 GMT   |   Update On 2018-08-31 09:57 GMT
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 27 பேர் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். #SamathuvaMakkalKatchi
சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 12-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், அதன் தலைவர் சரத்குமார், கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அகில இந்திய சமத்துவ கட்சியின் 12-வது ஆண்டு தொடக்க விழா இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. எனது 22 வருட அரசியல் பயணம் தொடர்கிறது. சாதி, மத பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

நாங்கள் எந்தகட்சியையும் வீழ்த்துவதை பற்றி யோசிக்கவில்லை. எங்களை நாங்கள் தயார்படுத்தி வருகிறோம். பாராளுமன்றத்துக்கு எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இதில் போட்டியிட 27 பேர் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய அளவில் எதிர்கட்சிகளிடையே ஒற்றுமை வர வேண்டும் என்று நேற்று நடந்த கலைஞர் புகழ் வணக்க கூட்டத்தில் தலைவர்கள் பேசியுள்ளனர். அது வரவேற்கத்தக்கது.

மேற்கு வங்க எம்.பி. டெரிக் ஓ பிரையன் நாற்பதும் நமதே. நாங்க ரெடி நீங்க ரெடியா என்று பேசி இருக்கிறார். அவர் எனது நண்பர். இந்த கோ‌ஷங்கள் நான் எழுப்பியவை. அதை நினைவில் வைத்து பேசி இருப்பது சந்தோ‌ஷம்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. எங்கள் கொள்கையே இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதான். வெறும் 2 எம்.பி.க்களை மட்டும் வைத்திருந்த பா.ஜனதா கட்சி ஆட்சிக்க வரவில்லையா. நாங்களும் 2 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்தோம். எங்களுக்கும் நாட்டை ஆளும் காலம் வரும்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. நான் கேட்டுக் கொள்வது நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

மாணவர்கள் கையில் அரிவாள், கத்தியுடன் செல்வது வருத்தம் அளிக்கிறது. மாணவர்களே உங்கள் எதிர்காலத்தைப் பற்றியும், உங்களைப் பற்றியும், உங்கள் பெற்றோரை பற்றியும் சிந்தியுங்கள்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், துணை பொதுச்செயலாளர் எம்.எ.சேவியர், தலைமை நிலைய செயலாளர் பாகீரதி, மாவட்ட செயலாளர்கள் முருகேச பாண்டியன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #SamathuvaMakkalKatchi

Tags:    

Similar News