செய்திகள்

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது - ஐகோர்ட்டில் அதிகாரிகள் பேரவை மனு

Published On 2018-08-22 03:17 GMT   |   Update On 2018-08-22 03:17 GMT
சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. #Idolscam
சென்னை:

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து பல சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனி போலீஸ் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகள், சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கவிதா உள்பட பலரை கைது செய்தனர். மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று தமிழ்நாடு கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள கோவில்களில் லட்சக்கணக்கான சாமி சிலைகள், இந்துசமய அறநிலையத்துறையிடம் பாதுகாப்பாக உள்ளன. கோவில் சிலைகள் காணாமல்போன சம்பவங்கள் எல்லாம் அண்மையில் நடைபெறவில்லை. அதிகாரிகளான நாங்கள் பதவி ஏற்கும் முன்பே, சம்பந்தப்பட்ட கோவில்களில் சிலைகள் காணாமல்போய் உள்ளது. இதுகுறித்து நாங்களே போலீசில் புகார் செய்துள்ளோம்.

ஆனால், புகார் செய்த அதிகாரிகளையும் கூட போலீசார் கைது செய்துள்ளனர். ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சிறந்த அதிகாரி என்று நீதிமன்றம் பாராட்டியதால், அவர் மற்ற அதிகாரிகளை நேர்மையற்றவர்களாக கருதுவது சரியல்ல.

மேலும், மனுதாரர் யானை ராஜேந்திரனும், ஐ.ஜி.யும் கூட்டுசேர்ந்து செயல்படுகின்றனர். ஒரு தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள விவரம் மனுதாரருக்கு எப்படி தெரியவந்தது? அவர் எப்படி அதுகுறித்து ஐகோர்ட்டில் மனு செய்தார்? என்பது மிகப்பெரிய கேள்வி.

ஒரு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒரு வழக்கை குறிப்பிட்ட அதிகாரி மட்டுமே விசாரிக்கவேண்டும் என்பது மற்ற அதிகாரிகளை குறைத்து மதிப்பீடுவதாகிவிடும். எனவே, இந்த வழக்கில் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  #Idolscam
Tags:    

Similar News