செய்திகள்

நாகர்கோவிலில் 3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

Published On 2018-08-19 15:56 GMT   |   Update On 2018-08-19 15:56 GMT
நாகர்கோவிலில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 கிலோ கஞ்சாவுடன் நின்ற வாலிபரை கைது செய்தனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் நகரில் சமீப காலமாக  கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக வடசேரி, ஒழுகினசேரி, கோட்டார் பகுதிகளில் ரகசியமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது. இதுபற்றி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் உடனடியாக கஞ்சா கும்பலை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசாரும் நாகர்கோவில் நகர பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கஞ்சா விற்றவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கஞ்சா கும்பலை போலீசார் கணிகாணித்து வந்தனர். 

கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் பையுடன் சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். இதை கண்ட போலீசார்  அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் 3 கிலோ 100 கிராம் பஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவரது பெயர் அந்தோணி (வயது 45), நாகர்கோவில் ஒழுகினசேரி புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் பிரபல கஞ்சா வியாபாரி என்பதும், இவர் மீது பல வழக்குகள் உள்ளதும், போலீசாரால் பலமுறை கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. 

இவர் நெல்லையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து நாகர்கோவிலில் அதிக விலைக்கு விற்பனை செய்து உள்ளார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை நாகர்கோவில் ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News