செய்திகள்

மலைச்சாலையில் மண் சரிவு- வால்பாறைக்கு 4-வது நாளாக கனரக வாகனங்களுக்கு தடை

Published On 2018-08-19 04:02 GMT   |   Update On 2018-08-19 04:02 GMT
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதிகளில் உள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால் இன்று 4-வது நாளாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை:

கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து கோவை மாவட்டம் வால்பாறையிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கன மழையால் ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் மலைப் பாதையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் 3-வது கொண்டை ஊசி வளைவிலிருந்து 9-வது கொண்டை ஊசி வளைவு வரையிலும் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் சாலை பெயர்ந்து உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிவைடர்கள் மற்றும் மணல் மூட்டைகளை வைத்து யாரும் செல்லாதவாறு தடுக்கப்பட்டுள்ளது.

மண் சரிவை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வாகனங்களை ஆழியாறு அருகே உள்ள சோதனை சாவடியில் வனத்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வால்பாறை வாழைத் தோட்டம் ஆற்றின் நீர் அப்பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்குள் புகுந்து டீசல் டேங்கில் தண்ணீர் புகுந்தது.

இதனால் டீசல் கிடைக்காமல் அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்க முடியவில்லை. வால்பாறைக்கு கன ரக வாகனங்கள் செல்ல முடியாததால் டீசல், காய்கறி உள்ளிட்ட பொருட்களை வெளியூரில் இருந்து கொண்டு செல்ல முடியவில்லை.

இன்று 4-வது நாளாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் கன ரக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கேரளாவிற்கு எந்த வாகனமும் செல்லவில்லை. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வால்பாறையில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News