செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - வக்கீல் குமாஸ்தா கைது

Published On 2018-08-15 16:19 GMT   |   Update On 2018-08-15 16:19 GMT
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி நண்பரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த வக்கீல் குமாஸ்தாவை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). இவரும் வெட்டியாந்தொழுவம் கிராமத்தை சேர்ந்த சிவா (45) என்பவரும் மாணவ பருவத்தின்போது ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படித்தவர்களாவர். நண்பர்களான இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வர்.

சிவா வேலூரில் உள்ள வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். சீனிவாசன் வேலை எதுவுமின்றி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனிவாசனை சிவா சந்தித்தார். அப்போது “நான் வக்கீல் குமாஸ்தாவாக இருப்பதால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நண்பர்கள் பழகியுள்ளனர். அங்கு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் உனக்கு உதவியாளர் வேலை வாங்கி தருகிறேன். ரூ.2 லட்சம் கொடுத்தால் உடனே வேலை வாங்கிவிடலாம்” என கூறியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறிய சிவாவிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை சீனிவாசன் கொடுத்துள்ளார். விரைவில் வேலை வாங்கித் தருவதாக பணத்தை அவர் வாங்கிக்கொண்டார்.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் சிவா வேலைவாங்கித்தரவில்லை. இதனால் பணத்தை திரும்ப தரும்படி சீனிவாசன் கேட்டபோது அது குறித்து பதில் அளிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தன்னிடம் வேலைவாங்கி தருவதாக ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாக ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த வக்கீல் குமாஸ்தா சிவாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். 
Tags:    

Similar News