செய்திகள்

கொடைக்கானல் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

Published On 2018-08-09 07:43 GMT   |   Update On 2018-08-09 07:43 GMT
கொடைக்கானல் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பெரும்பாறை:

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது. மலைப்பகுதியில் உணவுதேடி இடம்பெயரும் போது வழிமாறி ஊருக்குள் புகுந்து விடுகிறது.

பல்வேறு இன்னல்களுக்கிடையே காய்கறிகளை பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு இது மேலும் பேரிடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் சவ்சவ், காலிபிளவர், உருளை, கேரட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்டவைகளை பயிரிட்டனர்.

இப்பயிர்கள் செழித்து வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது. இன்று காலை பெருமாள்மலை அருகே உள்ள பி.எல்.செட் பகுதியில் யானைகள் கூட்டமாக புகுந்தன. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீரென நுழைந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பின்பு அருகில் இருந்த விளைநிலங்களுக்குள் புகுந்து காய்கறிகளை நாசப்படுத்தியது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யானைகள் தொல்லையால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் வனத்துறையினர் வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News