செய்திகள்

ஜக்கையனுக்கு ஒரு சட்டம், எங்களுக்கு ஒரு சட்டமா? தகுதிநீக்க வழக்கில் டிடிவி தரப்பு வாதம்

Published On 2018-07-23 07:17 GMT   |   Update On 2018-07-23 07:17 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் ஜக்கையனுக்கும் தங்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக டிடிவி தரப்பு வாதாடியது. #MLAsDisqualificationCase
சென்னை:

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதையடுத்து மூன்றாவது நீதிபதிக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை தொடங்கியது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதம் வருமாறு:-

18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது; இயற்கை நீதிக்கு எதிரானது; உள்நோக்கம் கொண்டது. சபாநாயகர் உத்தரவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்


பிரச்சனை தொடர்பாக உட்கட்சியை அணுகவில்லை என முதலமைச்சர் தரப்பில் சபாநாயகரிடம் பதில் அளிக்கப்பட்டது. இதன் நகலை எங்களுக்கு வழங்கியிருந்தால் பதில் அளித்திருப்போம். சபாநாயகர் முன் தாக்கல் செய்யாத ஆவணங்களின் அடிப்படையில் ததிகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜக்கையனுக்கும் 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.க்களை அவசரமாக தகுதி நீக்கம் செய்ததில் இருந்து உள்நோக்கத்துடன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது நிரூபணம் ஆகிறது.

இவ்வாறு டிடிவி தினகரன் தரப்பு வாதிட்டது. #MLAsDisqualificationCase
Tags:    

Similar News