செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறை - பயணிகள் கடும் அவதி

Published On 2018-07-22 21:25 GMT   |   Update On 2018-07-22 21:25 GMT
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை:

எழும்பூர் ரெயில் நிலையம், சென்னையின் முக்கிய ரெயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டத்துக்கு பஞ்சமில்லாமல் எப்போதும் பரபரப்பாக இந்த ரெயில் நிலையம் காணப்படும்.

இந்தநிலையில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் குடிநீர் வினியோகம் திடீரென பாதிக்கப்பட்டது. அங்கு உள்ள ஒரு குழாயில் கூட தண்ணீர் வரவில்லை. ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளிலும் தண்ணீர் வராததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சிலர் இதுபற்றி அங்குள்ள சுகாதார ஆய்வாளர்களிடம் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

எழும்பூர் ரெயில் நிலையத்தில் திடீரென குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் உணவு சாப்பிட்டவுடன் கைகளை கூட கழுவிக்கொள்ள முடியவில்லை. மக்கள் கூடும் இடங்களில் தேவையான வசதிகளை செய்து தருவது அரசின் முக்கிய கடமை ஆகும்.

அந்தவகையில் தலைநகரின் முக்கிய இடமான எழும்பூர் ரெயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்பது ஏற்க முடியாத செயலாகும். இந்த நிலைமை இனி தொடரக் கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு, சேத்துப்பட்டு பணிமனையில் உள்ள ராட்சத தொட்டியில் இருந்தே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு குடிநீர் வாரியத்திடம் ஒப்பந்த முறையில், தெற்கு ரெயில்வே பெற்று வருகிறது. ஆனால் போக்குவரத்து போலீசார் கெடுபிடி காரணமாக, சேத்துப்பட்டு பணிமனைக்கு குறைவான எண்ணிக்கையிலேயே குடிநீர் லாரிகள் வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு குடிநீர் வினியோகம் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. 
Tags:    

Similar News