செய்திகள்

கடைமடை வரை தண்ணீர் தடையின்றி செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2018-07-21 12:12 GMT   |   Update On 2018-07-21 12:12 GMT
பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் தடையின்றி செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் பி.எஸ். சேகர்-எஸ்.ரத்னா மணிவிழா நடந்தது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீண்ட நாட்களாக விவசாயிகள் எதிர்பார்த்து வந்த கல்லணை டெல்டா மாவட்ட பாசனத்துக்காக நாளை திறக்கப்பட உள்ளது. தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், பாசன வாய்க்கால்களை இதுவரை முறையாக தூர்வாரும் பணிகளை செய்யவில்லை. எனவே கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீர் செல்லுமா? என்ற நிலை உள்ளது.

எனவே கடைமடை வரை தண்ணீர் தாமதமின்றி தடையின்றி செல்ல தமிழக அரசு முழுமையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை.

விவசாயிகளின் நலன் கருதி வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டாவது தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுடன் ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது த.மா.கா. நகர தலைவர் பி.எஸ்.சங்கர், மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ், நகர செயலாளர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News