செய்திகள்

அதிமுக வழிகாட்டு குழுவை அமைக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2018-07-18 06:16 GMT   |   Update On 2018-07-18 06:16 GMT
ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வழிகாட்டு குழுவை அமைக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.#Edappadipalanisamy #opanneerselvam

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வந்த அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்டு வந்த அணியினரும் கடந்த ஆண்டு ஒன்றாக இணைந்தனர். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அ.தி.மு.க.வை வழி நடத்த ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு உதவி செய்ய துணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

மேலும் அ.தி.மு.க. கட்சி விவகாரங்களை கவனிக்க 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அத்தகைய குழு எதுவும் நியமிக்கப்படவில்லை. அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் உண்மையில் வேறு பல வி‌ஷயங்களும் விவாதிக்கப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் வருமான வரித்துறை நடத்தும் சோதனைகள் பற்றி பேசப்பட்டது.

குறிப்பாக சத்துணவு கூடங்களுக்கு முட்டை விநியோக்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனை பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அ.தி.மு.க. வுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைக்க வேண்டுமானால் கட்சி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “ஏற்கனவே பேசப்பட்ட படி கட்சியை வழி நடத்த வழிகாட்டுக் குழுவை உடனே ஏற்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர். எனவே அ.தி.மு.க.வை வழிநடத்தும் வழிகாட்டு குழு விரைவில் அமைக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கட்சி நிர்வாகங்களை மேற்கொள்ள இருக்கும் இந்த வழிகாட்டு குழு மொத்தம் 11 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும் அதில் 6 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக இருப்பார்கள்.

5 பேர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருப்பார்கள். எனவே வழிகாட்டு குழுவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதாக தெரிகிறது.

இந்த வழிகாட்டு குழு மூலம் அ.தி.மு.க. கட்சியை புத்துணர்ச்சி பெற செய்வதற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. #Edappadipalanisamy #opanneerselvam

Tags:    

Similar News