செய்திகள்

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில் முக்கிய குற்றவாளி சதீசன் கைது

Published On 2018-07-17 12:22 GMT   |   Update On 2018-07-17 12:22 GMT
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜர் ஆகாத சதீசன் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்த ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை போனது.

இது குறித்து கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து கேரளாவை சேர்ந்த சயன், மனோஜ்சாமி, திபு, ஜம்ஷீர் அலி, சதீசன், பிஜின், உதய குமார். சந்தோஷ் சாமி, வாளையார் மனோஜ், ஜித்தன் ராஜ் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

இவர்கள் 10 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சயன், மனோஜ் சாமி, ஜம்ஷீர் அலி, பிஜின், உதய குமார், சந்தோஷ்சாமி, வாளையார் மனோஜ் ஆகிய 7 பேர் மட்டும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

முக்கிய குற்றவாளி சதீசன் மட்டும் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவரை கோத்தகிரி போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சதீசன் கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று சதீசனை கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டிக்கு அழைத்து வந்து நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முரளிதரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சதீசன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News