செய்திகள்

வருகின்ற தேர்தல்களில் த.மா.கா. அசைக்க முடியாத சக்தியாக உலா வரும்- ஜி.கே.வாசன்

Published On 2018-07-16 10:16 GMT   |   Update On 2018-07-16 10:16 GMT
வருகின்ற தேர்தல்களில் த.மா.கா. அசைக்க முடியாத சக்தியாக உலா வரும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:

காமராஜரின் 116-வது பிறந்த நாளையொட்டி அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் த.மா.கா. பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் அண்ணாநகர் ராம்குமார் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார்:-

காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தருவதற்கு நூறு சதவீதம் தகுதி பெற்ற ஒரே கட்சியாக த.மா.கா. வளர்ந்து கொண்டு வருகிறது. காமராஜருக்கு பிறகு யாராலும் தமிழகத்தில் இதுவரை நல்ல ஆட்சியை தர முடியவில்லை. இன்றைய அரசியல்வாதிகள் சுய நலத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். பொது நலம், தொலைநோக்கு பார்வை யாரிடமும் இல்லை குறுகிய பார்வை மட்டுமே உள்ளது.

இன்று விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. காமராஜர் ஆட்சியில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் கட்டினார். இன்று கிராமங்கள் தோறும் டாஸ்மாக் கடைகள் திறந்து வருகிறார்கள்.

லோக் ஆயுக்தா சட்டத்தை சீர்திருத்தங்களுடன் பலமான சட்டமாக தமிழகத்தில் வந்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

வருகின்ற தேர்தல்களில் த.மா.கா. அசைக்க முடியாத சக்தியாக உலா வரும். தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுமைக்கும் கூட்டணி அரசியல் தான் வருங்காலத்தில் ஏற்படும். இது காலத்தின் கட்டாயம். யதார்த்த உண்மை ஆகும். நல்லவர்கள் இணைந்து நாடாளும் நேரம் நெருங்கி கொண்டு இருக்கிற இந்த முக்கிய தருணத்தில் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிக்கு அடித்தளமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News