செய்திகள்

யார் காலைப் பிடித்தாலும் எடப்பாடி அரசு தப்பமுடியாது - டி.டி.வி. தினகரன்

Published On 2018-07-16 06:00 GMT   |   Update On 2018-07-16 06:00 GMT
தமிழகத்தில் அனைத்து துறைகளில் ஊழல் நிறைந்து இருப்பதாவும், மத்தியில் இருப்பவர்கள் உள்பட யார் காலைப் பிடித்தாலும் எடப்பாடி அரசு தப்பமுடியாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #EdappadiPalanisamy
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

துரோகத்தை எப்படி கருவறுப்பது என்று சொல்வார்கள். கருவுள்ள முட்டை ஊழலில் இருந்து ஆரம்பித்து இருக்கிறார்கள். இது முட்டை, பருப்பு ஊழல் மட்டுமல்ல. சம்பந்திக்கு வேலை கொடுப்பதும், அமைச்சர்களாக இருப்பவர்கள் அவர்கள் உறவினர்களுக்கு வேலை கொடுப்பதும் சட்டப்படி தவறானது. எல்.இ.டி. பல்பு வாங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். தமிழ்நாட்டில் இன்று எடப்பாடி தலைமையில் நடைபெறும் ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

கோவை அருகே போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு சாலையாக இருந்தாலும், சாக்கடையாக இருந்தாலும் முறைகேடு நடைபெறுகிறது. மத்தியில் உள்ளவர்கள் காலைப் பிடித்துக் கொண்டால் தப்பி விடலாம் என்று இன்றைய ஆட்சியாளர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

யார் காலைப் பிடித்தாலும் எடப்பாடி அரசு தப்ப முடியாது. தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். கடவுள் அதை கையில் எடுக்கும் காலம் வந்துவிட்டது. தவறு செய்தவர்கள், கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

5 ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய பிறகும் இந்த ஆட்சி தொடர்கிறது. மத்திய அரசு குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை செய்கிறது. மத்திய பா.ஜனதா அரசு ஆதரவுடன் எடப்பாடி ஆட்சி நடைபெறுகிறது.

மக்கள் கேட்காத 8 வழி சாலையை கொண்டு வருகிறார்கள். சென்னை-கன்னியாகுமரி, சென்னை-பெங்களூருக்கு 8 வழி சாலை போடலாம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தனர். இனி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அவர்களால் ‘டெபாசிட்’ கூட வாங்கமுடியாது. இந்த ஆட்சி தொடர யார் காரணம் என்பது சிறு குழந்தைகளுக்கும் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #EdappadiPalanisamy
Tags:    

Similar News