செய்திகள்

கோவையில் தொடரும் அதிரடி சோதனை- புகையிலை,குட்கா பறிமுதல்

Published On 2018-07-14 08:28 GMT   |   Update On 2018-07-14 08:28 GMT
கோவை நகரில் அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனையில் பதுக்கி வைத்துள்ள புகையிலை, குட்கா, ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை:

கோவை அருகே கண்ணம் பாளையத்தில் இயங்கி வந்த குட்கா குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை நகரில் கடந்த சில மாதங்களாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் குட்கா பதுக்கி வைத்துள்ள கடைகள், குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை தாமஸ் வீதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாகாராம் என்ற வியாபாரி குடோன் வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர். விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குடோனுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் வாகாராம் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாமஸ் வீதி அருகே உள்ள பொறிக்கார வீதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிமையாளர் வராததால் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இன்று அங்கு சென்று சோதனை நடத்த உள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2-ந் தேதி செல்வபுரம் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் ஒரு வீட்டில் ரூ. 17 லட்சம் மதிப்பிலான 1.5 டன் புகையிலை பொருட்களும், கோவை ராஜவீதி, தாமஸ் வீதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி ஏராளமான குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கடந்த 10 மாதத்தில் மட்டும் 7 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. #tamilnews
Tags:    

Similar News