செய்திகள்
பள்ளி தலைமை ஆசிரியருக்கு மண்புழு உரங்களை கவர்னர் வழங்கியபோது எடுத்த படம்.

கவர்னர் மாளிகையில் தயாரிக்கப்பட்ட மண்புழு உரங்கள் - பள்ளிகளுக்கு பன்வாரிலால் புரோகித் வழங்கினார்

Published On 2018-07-13 03:49 GMT   |   Update On 2018-07-13 03:49 GMT
கவர்னர் மாளிகையில் தயாரிக்கப்பட்ட மண்புழு உரங்களை பள்ளிகளுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
சென்னை:

சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 70 பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த பள்ளிகளுக்கு கவர்னர் மாளிகையில் தயாரிக்கப்பட்ட மண்புழு உரங்களை இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. கவர்னர் பன்வாரிலால் புரோகித், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மண்புழு உரங்களை வழங்கி பேசியதாவது:-

மண்புழு உரத்தின் முக்கியத்துவத்தையும், அதை தயாரிக்கும் முறையையும் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்துவதின் மூலமாக நீங்கள் பள்ளிகளுக்கு சென்று மண்புழு உரத்தின் அவசியம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்பதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு மண்புழு தயாரிக்கும் முறையை தெரியப்படுத்துவதால், சிறுவயதிலேயே நன்கு தெரிந்து கொள்வார்கள். இதை மறக்க மாட்டார்கள்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரம், செடிகளை வளர்த்து மண், நீர் மற்றும் காற்று மாசுபடாமல் தடுக்க வேண்டும். இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை உண்பதால் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். தாவரங்களின் இலை தழைகள் மற்றும் இதர பண்ணை கழிவுகளை மண்ணில் இட்டு சிறிதளவு மக்கச்செய்து அவற்றுடன் ஆடு, மாடுகளின் சாணக்கழிவுகளை கலந்து நிழற்பாங்கான பகுதிகளில் வைத்து மண்புழுக்களை விடுவதால் நமக்கு நல்ல மண்புழு உரம் கிடைக்கிறது.

மண்புழு உரத்தை நிலத்துக்கு இடுவதால் மண்ணில் உள்ள ரசாயனத்தின் அளவு குறைக்கப்பட்டு, மண்ணின் உயிர் தன்மை மேம்படு கிறது. நுண்ணுயிர்களின் அளவு அதிகரிக்கிறது. மண்புழு உரம் மண்ணின் கடின தன்மையை குறைத்து செடிகளின் வேர்கள் நன்கு வளர்வதற்கான காற்றோட்டம், நீர்ப்பிடித்தன்மை, இயற்கை அங்கக தன்மை போன்றவற்றை மேம்படுத்துகிறது. மண்புழு உரத்தில் இயற்கையாகவே உள்ள ஊட்டச்சத்துக்கள் தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

எனவே ரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டை குறைத்து, மண்புழு உரங்களை பயன்படுத்தி இயற்கை வழியில் உணவு உற்பத்தி செய்து நமது தேக ஆரோக்கியம் மற்றும் சந்ததிகளை காப்போம். வீடுகளில் சேரும் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி அவரவர் வீடுகளில் இயற்கை உரங்களை பெற்று இயற்கை வழியில் காய்கறிகளை உற்பத்தி செய்து, பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News